ADDED : செப் 12, 2013 03:55 PM

தொடர் கொலைகள். திணறும் காவல்துறை. உதவும் திறன் பெற்றவன், மதுவின் அடிமையாய்! இயக்குனர் ஜீது ஜோசப்பின் ‘உளவியல்’ த்ரில்லர்.
மம்முட்டி, மோகன்லால் வரிசையில் திடமாக தடம் பதிக்கும் பிரித்விராஜின் சூப்பர் படம். அதிரடி காவல் அதிகாரி சாம் அலெக்ஸ் (பிரித்விராஜ்), தன் காதல் மனைவி டீனாவையும் (மேக்னாராஜ்), மகளையும் கடமைக்கு விலையாக இழக்கிறார். போதைக்கு அடிமையாகிறார். ஆனாலும், உயரதிகாரி அரவிந்தாக்ஷா மேனனுக்கு (விஜயராகவன்), சாமின் மேலிருந்த நம்பிக்கை போகவில்லை. கேரளத்தில் தொடர் கொலைகள். கொல்லப்படும் ஆண்கள் எல்லாம் திருமணமான இளைஞர்கள். அவர்களது நெஞ்சில் எல்லாம் கத்தியால் கீறி எழுதப்பட்ட ‘பைபிள்’ வாசகங்கள். தலையைப் பிய்த்துக்கொள்ளும் காவல்துறை, சாமின் உதவியை நாடுகிறது. சாம் குடியிலிருந்து மீண்டு, குற்றவாளியைக் கண்டுபிடித்தாரா? என்பது க்ளைமாக்ஸ்.
கை நடுக்கம், தள்ளாட்டம் என, குடிக்கு அடிமையானவனை கண்முன் கொண்டு வருகிறார் பிரித்விராஜ். அவரது பின்னோட்ட நினைவுகளில் வரும் நாயகி மேக்னாராஜ், கண்களுக்கு விருந்து! இசையமைப்பாளர் செஜோ ஜானும், ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவும் போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் பணியை செய்திருக்கிறார்கள்.
பலவித யூகங்களைக் கொடுத்து காவல் துறையை திணற அடிப்பது போலவே, பார்க்கும் ரசிகனையும் குழப்பி, கடைசி வரை ‘சஸ்பென்ஸ்’ தக்க வைத்திருக்கிறது... இயக்குனர் ஜோசப்பின் அசாத்திய திறமை! ‘த்ரில்லர்’ வகையறாக்களில், சின்ன சறுக்கல்கூட, படத்தை சொதப்பலாக்கிவிடும். ஆனால்... கீறல் விழாமல் தப்பித்திருக்கிறது மெமரீஸ்.
ரசிகன் குரல்: ராஜேஷ்குமார் நாவல் படிச்சதுமாதிரி இருக்குதுப்பா!
மொத்தத்தில் ‘மெமரீஸ்’ - ‘திகட்டாத திகில்’