ADDED : டிச 07, 2024 03:29 AM
சென்னை : புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் வணிகர்கள், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதில் இருந்து இம்மாதம் விலக்கு அளிக்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால், பல வணிகர்களின் கடைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
ஐந்து நாட்களாகியும், அவர்களால் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடியவில்லை.
வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் வணிகர்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, இம்மாதம் வட்டி வசூலிக்க கூடாது.
இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாத தவணை செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும். தாமதமாக செலுத்துவதற்கு கூட்டு வட்டி வசூலிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.