29ம் தேதி வரை மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
29ம் தேதி வரை மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
ADDED : ஜூன் 24, 2025 06:50 AM

சென்னை: 'வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 29ம் தேதி வரை, சில இடங்களில் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 11 செ.மீ.,; கோவை சோலையாரில் 10 செ.மீ.,; கோவை சின்கோனா பகுதிகளில் 9 செ.மீ., ; கோவை வால்பாறையில் 8 செ.மீ., ;கடலுார் மாவட்டம் லால்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தலா 7 செ.மீ.,; கோவை ஆழியார், சென்னை மாவட்டம் சென்ட்ரல், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, பார்வூட்டில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், சிவகங்கை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பதிவாகி உள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்றும், நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மிதமான மழை பெய்யும். அதுபோல், 26 முதல் 29ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.