கோவை, மதுரைக்காக மெட்ரோ ரயில்: மத்திய அரசின் ஒப்புதலுக்காக 7 மாதமாக காத்திருப்பு
கோவை, மதுரைக்காக மெட்ரோ ரயில்: மத்திய அரசின் ஒப்புதலுக்காக 7 மாதமாக காத்திருப்பு
UPDATED : ஜூலை 05, 2025 05:20 AM
ADDED : ஜூலை 05, 2025 12:39 AM

சென்னை:மதுரை மற்றும் கோவையில், மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏழு மாதங்களாக காத்திருக்கிறது.
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய - மாநில அரசுகளிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி விட்டது.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை, 31.93 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவையில், 39 கி.மீ., துாரத்தில், அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்துள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகளும், மதுரை, கோவையில் ஆய்வு செய்துள்ளனர்.
ஆனால், இந்த மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், அடுத்தகட்ட பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய அரசு, சில மாற்றங்களை செய்து திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.
இதையடுத்து, திருத்தப்பட்ட அறிக்கையை, கடந்த ஆண்டு நவம்பரில் மீண்டும் அனுப்பினோம். இதற்கு, மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தமிழக அரசு வாயிலாக, மத்திய அரசின் ஒப்புதலை பெற முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.