மேட்டூர் - சரபங்கா நீரேற்றும் திட்டம்; அரசிடம் ரூ.115 கோடி எதிர்பார்ப்பு
மேட்டூர் - சரபங்கா நீரேற்றும் திட்டம்; அரசிடம் ரூ.115 கோடி எதிர்பார்ப்பு
ADDED : அக் 22, 2025 06:23 AM

சென்னை : மேட்டூர் உபரி நீரை பயன்படுத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள மேலும் 25 ஏரிகளை நிரப்புவதற்கான திட்டத்தை செயல்படுத்த, அரசிடம் 115 கோடி ரூபாயை நீர்வளத் துறை கேட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, 93.4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. இந்த அணை வாயிலாக, டெல்டா மாவட்டங்களின் பாசனம், பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இருந்தாலும், அணையின் பயன் இப்பகுதி மக்களுக்கு பெரிதாக இல்லை. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு போதிய நீர் கிடைக்காமல் இருந்தது. மேட்டூர் அணையின் உபரி நீரை, இந்த ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியில் நீரேற்று திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்காக, 565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி துவங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தி.மு.க., அரசு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியது. இத்திட்டம் வாயிலாக, 52 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஏரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் 25 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில், திட்டத்தை செயல்படுத்த, நீர்வளத் துறை வாயிலாக அரசிடம் 115 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைத்த பின், பணிகள் துவங்கப்படும் என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டம் முழுமையாக நிறைவேறினால், சரபங்கா வடிநிலத்தில் உள்ள, 27,045 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.