நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' கொள்முதல்: 'டெண்டர்' நடைமுறைகளை தொடர தடை
நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' கொள்முதல்: 'டெண்டர்' நடைமுறைகளை தொடர தடை
ADDED : டிச 13, 2025 01:00 AM

சென்னை: தமிழகத்தில் நாய்களுக்கு பொருத்தும், 'மைக்ரோ சிப்' கருவிகள் கொள்முதலுக்கான, 'டெண்டர்' நடைமுறைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில், நாய்களுக்கு பொருத்துவதற்கு, 'மைக்ரோ சிப்' மற்றும் 'ரீடர்' கொள்முதல் தொடர்பாக, கடந்த ஜூலை 24ல், தமிழக கால்நடை அபிவிருத்தி கழகம் 'டெண்டர்' அறிவிப்பு வெளியிட்டது. இதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மந்தைவெளியை சேர்ந்த, 'எக்ஹிலர் இனோவேட்டிவ் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
மனுவில், 'டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளை, கால்நடை அபிவிருத்தி கழகம் மீறியுள்ளது. முந்தைய டெண்டரில் தேர்வாகாத, ஸ்ரீ துர்கா மெடிக்கல் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு, தற்போது டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. அதை ரத்து செய்து, புதிதாக டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ''முந்தைய டெண்டரில் விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல், தகுதி இழப்புக்கு ஆளான நிறுவனம், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வாகி உள்ளது என்ற மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால், 'மைக்ரோ சிப்' டெண்டர் கொள்முதல் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,'' என, உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு, வரும் 18ம் தேதிக்குள், கால்நடை அபிவிருத்தி கழகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

