ராஜலட்சுமி இன்ஜி., கல்லுாரியில் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' நிறைவு
ராஜலட்சுமி இன்ஜி., கல்லுாரியில் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' நிறைவு
ADDED : டிச 13, 2025 01:00 AM

சென்னை: 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் - 2025' போட்டிகள் நிறைவடைந்தன.
மத்திய கல்வித்துறை மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில், 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் - 2025' மென்பொருள் போட்டிகள், நாடு முழுதும் 60 மையங்களில் நடந்தன; 13 மாநிலங்களை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஹேக்கத்தான் நிறைவு விழா, சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்தது. போட்டியில் முதல் நான்கு அணிகளுக்கு, தலா 1.5 லட்சம் ரூபாய்; ஐந்து மற்றும் ஆறாவது அணிகளுக்கு தலா 75,000 ரூபாய் பரிசு தொகைகள் வழங்கப்பட்டன.
விழாவில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, காணொளி வாயிலாக பேசியதாவது: தொழில், கல்வி மற்றும் அரசாங்கத்தில் உள்ள சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஒரு சிறந்த தளமாக இது அமைந்துள்ளது.
சைபர் குற்றங்கள் போன்ற பல்வேறு சவால்களுக்கு, அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், 'டிஜிட்டல்' கருவிகள் பயன்படுத்தி, சிறந்த தீர்வுகளை உருவாக்கிய மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் இளைஞர்களின் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளார். நாளைய சிக்கல்களுக்கு, இளைஞர்கள் இன்றே தீர்வு கண்டுவிடுவர்.
இளைஞர்களை எப்போதும் முன்னிலைப்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் உலகளாவிய கல்விசார் கூட்டமைப்பு பிரிவின் தலைவர் சுசீந்திரன், ராஜலட்சுமி கல்வி நிறுவனத்தின் துணை தலைவர் அபய் மேகநாதன், இன்ஜி., கல்லுாரி முதல்வர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

