பழனிசாமி பேசும் போது மைக்... துண்டிப்பு : ஸ்டாலினுடன் மோதல்
பழனிசாமி பேசும் போது மைக்... துண்டிப்பு : ஸ்டாலினுடன் மோதல்
UPDATED : மார் 20, 2025 11:54 PM
ADDED : மார் 20, 2025 11:35 PM

சென்னை : தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலைகள் குறித்து, நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி காரசாரமாக கேள்விகள் எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழனிசாமி தொடர்ந்து பேச முடியாத வகையில், அவருக்கான, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைக் கண்டித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் துவங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ''பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்,'' என, சபாநாயகரை பார்த்து அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி தர தயங்கிய சபாநாயகர், ''காலை சபை துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே, நீங்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, ''அனுமதி தரக்கூடாது,'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறிய நிலையில், முதல்வர் குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கும்படி கூறினார்.
இதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:
பழனிசாமி: மதுரை, பெருங்குடி அருகே சிவகங்கையை சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கோவை மதுக்கரையில், ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
ஈரோடு நசியனுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, தம்பதி கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே மடபுரத்தில், கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக் கொல்லட்டுள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று முதல்வர் சொன்ன தினமே, நான்கு கொலைகள் நடந்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின்: நீங்கள் எது வேண்டுமானாலும் பேசுங்கள்; அதற்கான ஆதாரங்களை நான் தருகிறேன்.
சபாநாயகர் அப்பாவு: அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து பேச, எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உள்ளது. நீங்கள் நான்கு குற்றச்சாட்டுகளை கூறி விட்டீர்கள். அதை பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு தான்; சொல்லி முடியுங்கள்.
அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுவதில் தவறில்லை. என்ன நடந்தது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் போது, அரசு மீது குற்றம் சாட்டுகிறார். அரசின் நடவடிக்கை என்ன என்று தான் அவர் கேட்க வேண்டும்.
பழனிசாமி: அன்றாட நிகழ்வாக தொடர்ந்து நடக்கிறது. ஒருநாள் நடந்தால் பரவாயில்லை.
திருநெல்வேலி கொலை சம்பவத்தை பற்றி முதல்வர் நேற்று சொன்னார். அன்றே நான்கு கொலைகள் நடந்துள்ளன. இது, மக்களின் உயிர் பிரச்னை. பேசித்தான் ஆக வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தவர். என்ன நடந்தது என்று கேட்டால், அதற்கான பதிலை முதல்வர் சொல்வார். பொதுவான குற்றச்சாட்டை சொல்லும் போது, அது சரியாக வராது. தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.
முதல்வர் ஸ்டாலின்: துாத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் பற்றி நான் சொல்லட்டுமா? விதிமுறைக்கு உட்பட்டு விளக்கம் அளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.
சபாநாயகர்: எதிர்க்கட்சித் தலைவர் உட்காருங்கள். முதல்வர் பேசும் போது எழுந்து நின்று பேசுவது, எந்த வகையில் நியாயம்; நீங்கள் பேசுவது சபை குறிப்பில் இடம்பெறாது.
முதல்வர் ஸ்டாலின்: சம்பவம் நடக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது தான் கேள்வி. உங்களை போல, 'டிவி'யை பார்த்து தெரிந்து கொண்டதாக சொல்லவில்லை.
இவ்வாறு முதல்வர் பேசியதற்கு, பதில் அளிக்க பழனிசாமி முயற்சித்தபோது, அவரது, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து, 'எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு மைக் கொடுங்கள்' என கோஷம் போட்டபடியே வெளிநடப்பு செய்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், ''தைரியம் இருந்தால், நான் சொல்லும் விளக்கத்தை அமர்ந்து கேட்டுவிட்டு செல்லுங்கள்,'' என்றார். ஆனால், சபையில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.