ADDED : பிப் 20, 2025 02:33 AM
திருச்சி:''சீமான், மைக் புலிகேசி, அவருக்கெல்லாம் நான் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை,'' என, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த வருண்குமார் குறித்தும், அவரது மனைவி ஐ.பி.எஸ்., அதிகாரி வந்திதா பாண்டே, குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பினர்.
இதுகுறித்து சீமான் மீது, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருண்குமார் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வருண்குமார், திருச்சி டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றார். வழக்கு விசாரணைக்கு, இரு முறை டி.ஐ.ஜி., வருண்குமார் ஆஜரான நிலையில், நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்தது; விசாரணைக்கு டி.ஐ.ஜி., ஆஜரானார். சம்மன் அனுப்பியும் சீமான் ஆஜராகவில்லை; அவரது வக்கீல் மட்டும் ஆஜராகினார்.
இந்நிலையில் வழக்கை வரும் ஏப்., 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த டி.ஐ.ஜி., வருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னையும், என் குடும்பத்தாரையும் தவறாக பேசினர். அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. என் மனைவியும், நானும் விவகாரத்து செய்யப்போவதாக செய்தி பரப்புகின்றனர். கேவலமான மனிதர்களாக உள்ளனர். சீமான் மைக் புலிகேசி. அவருக்கெல்லாம் நான் ரியாக்ட் செய்யமாட்டேன். நீதிமன்றத்தில் வழக்கை சட்டப்படி சந்திப்பேன், என்றார்.

