பால், முட்டை, இறைச்சி உற்பத்தி தமிழகத்தில் 10 சதவீதம் உயர்வு
பால், முட்டை, இறைச்சி உற்பத்தி தமிழகத்தில் 10 சதவீதம் உயர்வு
ADDED : ஜன 24, 2025 12:27 AM
சென்னை:கால்நடை பராமரிப்பு துறையின், ஒருங்கிணைந்த மாதிரி வரைவு திட்டத்தின் கீழ், பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி, கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. மத்திய அரசின், 50 சதவீத நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவதற்கு உதவுகிறது.
இந்த கணக்கெடுப்பின் வாயிலாக, கால்நடை வளர்ப்போரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, பல்வேறு திட்டங்களை வகுக்கவும், மேற்பார்வையிடவும், மதிப்பாய்வு செய்யவும், அவற்றின் விளைவுகளால் ஏற்படும் தாக்கத்தை கணக்கிடவும் முடியும்.
இந்த கணக்கெடுப்பு பணி, கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் என, ஆண்டுக்கு மூன்று பருவங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு, 'இலிஸ்' என்ற செயலி, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில், மாநிலத்தின் அனைத்து மாவட்டம், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நடந்த கணக்கெடுப்பின்படி, பால், முட்டை, இறைச்சி உற்பத்தி, முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் உயர்ந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.
அதாவது, பால் உற்பத்தி, 109 லட்சம் டன், முட்டை உற்பத்தி, 22.33 கோடி, இறைச்சி உற்பத்தி, 8 லட்சம் டன் ஆக உயர்ந்து உள்ளது.
நடப்பு ஆண்டுக்கான பால், முட்டை, இறைச்சி கணக்கெடுப்பு பணி நடந்து வருவதாக, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

