ஆவினில் பணியாளர்கள் பற்றாக்குறை பால் கொள்முதல், விற்பனை மந்தம்
ஆவினில் பணியாளர்கள் பற்றாக்குறை பால் கொள்முதல், விற்பனை மந்தம்
ADDED : மே 27, 2025 07:03 AM
சென்னை: ஆவினில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, பால் கொள்முதல் மற்றும் விற்பனை மந்தமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக பால்வளத் துறையின் கீழ் இயங்கும், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, நாள்தோறும், 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
பின், ஆவின் வாயிலாக, இது விற்பனை செய்யப்படுகிறது. வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களையும், ஆவின் தயார் செய்து விற்பனை செய்கிறது.
அதேநேரத்தில், மாவட்ட பால்வளத் துறை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த, 10 ஆண்டுகளில், 50 சதவீதம் அளவிற்கு அலுவலர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், ஆவின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வருகின்றன.
பால் கொள்முதல், பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்து, மாதந்தோறும் பல கோடி ரூபாய் நஷ்டத்தை, ஆவின் நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:
ஆவினில் விற்பனை, நிதி, நிர்வாக பிரிவுகளில் உதவி பொது மேலாளர்கள், மேலாளர்கள் என, பெரும்பாலான பணிஇடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.
பெரும்பாலான மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், இந்த நிலை தான் நிலவுகிறது. இருக்கும் அலுவலர்களை வைத்து, அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிடுகின்றனர். இதனால், ஒருவர் மூன்று அல்லது நான்கு பணிகளை கூடுதலாக மேற்கொண்டு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பணிச்சுமைக்கு பயந்து, அலுவலர்கள் விருப்ப ஓய்வில் செல்வதும் அதிகரித்து வருகிறது. சிலர் நீண்ட விடுமுறையிலும் சென்றுள்ளனர். அலுவலர்கள் பற்றாக்குறையால், பல மாவட்ட சங்கங்களில் பால் கொள்முதல், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

