UPDATED : செப் 26, 2014 12:29 AM
ADDED : செப் 26, 2014 12:16 AM

மதுரை: 'தமிழக கனிம ஊழல் குறித்த 'சிடி'யை மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரையில் நேற்று வெளியிட்டது. 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையை துவக்க அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தது
மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ, ஐகோர்ட் வக்கீல் எஸ்.வாஞ்சிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:நிலக்கரி ஊழல் தொடர்பாக அனைத்து உரிமங்களையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது போல், தமிழகத்தில் கனிம ஊழலில் தொடர்புடைய அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும்.மதுரை ஐகோர்ட் கிளையில், 2012 செப்டம்பரில் எஸ்.பி., தாக்கல் செய்த அறிக்கையில், 'கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக ரூ.பல கோடி மதிப்புள்ள நிலங்களை வைத்துள்ளனர். அந்நிலங்களை வாங்க பணம் எப்படி வந்தது? என விசாரித்து வருகிறோம்' என குறிப்பிட்டார்.
மேலும், பத்து ஆண்டுகளில் கனிம துறைகள் சார்ந்து பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஊழல் பட்டியல் தாக்கல்'மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்தார். லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில், கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்; ஆனால் ஊழலில் சிக்கிய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டவிரோத கிரானைட் தொழில் மூலம் நடந்த ஊழலின் மொத்த தொகை எவ்வளவு, அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு, கிரானைட் அதிபர்களின் சொத்துக்களை முடக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பவை பற்றி தமிழக அரசு தெரிவிக்கவில்லை. துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட தாது மணல் கொள்ளை குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விசாரணையை துவக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கனிம ஊழல் குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் பல ஆதாரங்களை திரட்டி 'சிடி'யாக தயாரித்துள்ளது; அதை சகாயத்திடம் வழங்குவோம்.இவ்வாறு கூறினர்.நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், ''சகாயம், விசாரணையை விரைவில் துவக்கிட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தரக்கோரியும், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் அக்.,௧ல் விவசாயிகள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது,'' என்றார்.
