ஜல்லி, 'எம்-சாண்ட்' எடுத்து செல்ல இனி 'ஆன்லைன் பாஸ்' கட்டாயம்: கனிமவளத்துறை உத்தரவு
ஜல்லி, 'எம்-சாண்ட்' எடுத்து செல்ல இனி 'ஆன்லைன் பாஸ்' கட்டாயம்: கனிமவளத்துறை உத்தரவு
UPDATED : ஜூன் 18, 2025 01:14 AM
ADDED : ஜூன் 17, 2025 11:25 PM

சென்னை:கருங்கல் ஜல்லி, 'எம்--சாண்ட்' போன்றவற்றை எடுத்து செல்ல, 'ஆன்லைன்' முறையில், நடைச்சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 3,000க்கும் அதிகமான இடங்களில், தனியார் கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கருங்கற்கள், கிரஷர்கள் எனப்படும் கல்லுடைப்பு ஆலைகள் வாயிலாக உடைத்து, ஜல்லிகளாக மாற்றப்படுகின்றன.
நடைச்சீட்டு
இதில் ஒரு பகுதி கருங்கற்கள், ஆலைகளில் துகள்களாக நொறுக்கப்பட்டு சுத்தப்படுத்தி, எம் - சாண்ட் ஆக கட்டுமான பணிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில், ஒவ்வொரு இடத்திலும் எந்த அளவுக்கு கருங்கல் வெட்டி எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த, இவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு, கனிம வளத்துறை சார்பில் நடைச்சீட்டு வழங்கப்படுகிறது.
இதுவரை, 'மேனுவல்' முறையில் இருந்ததால், குவாரி ஒப்பந்ததாரர்கள் நடைச்சீட்டுகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இதனால், ஒரே நடைச்சீட்டை பயன்படுத்தி, அதிக அளவில் கனிமங்கள் எடுத்து செல்லப்படுவதாக புகார் எழுந்தது.
அதனால், சுரங்கங்கள், குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்துச் செல்வதற்கான நடைச்சீட்டுகளை, 'ஆன்லைன்' முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அரசு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், கடந்த வாரம் எம் - சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களுக்கு, 'மேனுவல்' முறையில் நடைச்சீட்டு வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், கட்டுமான பணிகளுக்கு எம் - சாண்ட், ஜல்லி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'மேனுவல்' முறையில் வழங்கப்படும் நடைச்சீட்டுகள் நிறுத்தப்பட்டுஉள்ளன. 'ஆன்லைன்' முறையில் இதற்கான நடைச்சீட்டுகள், 'டிரான்சிட் பாஸ்' வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.
நடவடிக்கை
இதற்காக, https://mimas.tn.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதில், தனி நபர், நிறுவனம் ஆகிய பிரிவுகளில் தேவையான விபரங்களை அளித்து, 'பாஸ்' பெறலாம்.
குவாரி குத்தகைதாரர்கள், கிரஷர் உரிமையாளர்கள், எம் - சாண்ட் ஆலைகள், இந்த பாஸ்களை பெறலாம். ஆன்லைன் பாஸ் இல்லாமல், ஜல்லி, எம் - சாண்ட் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான அறிவிப்புகளை, மாவட்ட அளவில் வெளியிட, கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.