சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவ மாவட்டங்களில் 'மினி எக்ஸிபிஷன் சென்டர்'
சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவ மாவட்டங்களில் 'மினி எக்ஸிபிஷன் சென்டர்'
ADDED : ஜன 01, 2025 10:23 PM
சென்னை:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை, பொதுத் துறை மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிகளவில் வாங்குவதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும், மினி கண்காட்சி கூடங்களை, தமிழக அரசு அமைக்க உள்ளது. முதல் கட்டமாக, சென்னை கிண்டி, காஞ்சிபுரம் திருமுடிவாக்கத்தில், கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில், 50 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவை, வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, கண்ணாடி பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
தேசிய அளவில் அதிக சிறு, குறு நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே சமயம், தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து, பொதுத்துறை நிறுவனங்களும், பெரிய தொழில் நிறுவனங்களும் குறைந்த அளவிலான பொருட்களையே வாங்குகின்றன.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின், 'ஜெம் போர்டலில்' 2016ல் இருந்து இதுவரை, 40 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கியதில், தமிழக நிறுவனங்களின் பங்கு, 5 சதவீதம் மட்டுமே உள்ளது.
பொதுத்துறை, பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை விற்க, சிறு தொழில் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவது அவசியம். இதற்கு, பல்வேறு நகரங்களில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்பது கட்டாயமாகிறது. இதற்காக, அந்நிறுவனங்களுக்கு அதிகம் செலவாகிறது.
ஒரு கண்காட்சியில் அரங்கு அமைக்க, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. இதற்கு அரசு நிதியுதவி செய்தாலும், முதலில் நிறுவனமே பணத்தை செலவழிக்க வேண்டும்.
இதனால், மிக குறைந்த நிறுவனங்கள் மட்டுமே கண்காட்சியில் பங்கேற்கின்றன. பல நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும், சந்தை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, தமிழக சிறு, குறு நிறுவனங்கள் பயன் பெற, அனைத்து மாவட்டங்களிலும், 50 - 75 அரங்குகள் இடம்பெறும் வகையில் சிறிய கண்காட்சி கூடங்கள் அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதில் அம்மாவட்டத்தை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்று, பெரிய நிறுவனங்களை அழைத்து வந்து, தங்களின் தயாரிப்புகளை விற்கலாம்.
இதுகுறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டங்களில் அமைக்கப்படும் சிறிய கண்காட்சி கூடங்களில், அரசு தொழிற்பேட்டைகளில் செயல்படும் நிறுவனங்கள் மட்டுமின்றி, அதற்கு வெளியே ஆலைகளை வைத்துள்ள நிறுவனங்களும் பங்கேற்கலாம்.
இதனால், எந்தெந்த மாவட்டத்தில் என்ன விதமான பொருட்கள் உற்பத்தியாகின்றன என்பதை எளிதில் அறியும் வசதி உருவாகும். இது, பொது மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
ஒரு மாவட்டத்திற்குள் உள்ளேயே அதிக வியாபாரம் நடக்கும். சிறு நிறுவனங்களின் கண்காட்சி செலவு வெகுவாக குறையும். முதல் கட்டமாக சோதனை முயற்சியாக, சென்னை கிண்டி, காஞ்சிபுரம் திருமுடிவாக்கத்தில் சிறிய கண்காட்சி கூடங்கள் அமைக்க ஆய்வு பணி நடக்கிறது. விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.