மூன்றரை ஆண்டுகளில் 52,000 புதிய தொழில் முனைவோர்கள்
மூன்றரை ஆண்டுகளில் 52,000 புதிய தொழில் முனைவோர்கள்
ADDED : டிச 24, 2024 07:15 AM
சென்னை : “கடந்த மூன்றரை ஆண்டுகளில், 1,805 கோடி ரூபாய் மானியத்துடன், 4,601 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு, 52,128 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர்,” என, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் மாவட்ட தொழில் மைய மேலாளர்களின் திறனாய்வு கூட்டம், சென்னை கிண்டி, 'சிட்கோ' அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் அன்பரசன், துறை செயலர் அதுல் ஆனந்த், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
ஐந்து வகையான சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் பட்டியல் சமூகத்தினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த மூன்றரை ஆண்டுகளில், 1,805 கோடி ரூபாய் மானியத்துடன், 4,601 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டு, 52,128 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக துவக்கப்பட்ட கலைஞர் கைவினை திட்டத்தை, கைவினை கலைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கைவினை கலைஞர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அத்திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை எடுத்து கூறி, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளுக்கு அனுப்பப்படும் கடன் விண்ணப்பங்களை, மாவட்ட பொது மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும். உணவு பொருட்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்கும் பிரதமரின் குறுந்தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.