ADDED : ஏப் 04, 2025 02:09 AM
சென்னை, ஏப். 4-
''தமிழகத்தில் போதுமான தண்ணீர் உள்ளது. கால்நடைகளுக்கு இரைகள் இருக்கின்றன. பால் தட்டுப்பாடு வராது,'' என பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது;
பால்வளத்துறை, 1958ல் துவக்கப்பட்டது. ஆவின் சிறந்த நிறுவனம் என்பதை நிரூபித்துள்ளோம். முந்தைய ஆட்சியை விட, 13 லட்சம் லிட்டர் பால், கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டு, 4.15 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளோம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பால் உற்பத்தி குறையும். ஆனால், இப்போது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், ஒரு கோடி பேர் பயன் பெற்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு, மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதற்காக, 342 கோடி ரூபாயை முதல்வர் வழங்கி உள்ளார். பால் விலையை உயர்த்தும் வாய்ப்பு இல்லை. பால்வளத்துறை வாயிலாக, 18 திட்டப் பணிகள்,1,800 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன.
இந்த திட்டம் நிறைவேறினால், ஆவினை யாரும் நெருங்க முடியாது. நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக மாறும்.பால் பணம், வங்கிகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. எனவே, ஊழல் நடக்க வாய்ப்பில்லை. தற்போது, 36 லட்சம் லிட்டராக உள்ள பால் உற்பத்தியை, 56 லட்சமாக உயர்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
கேரளா, கர்நாடகா மாநில கூட்டுறவு நிறுவனங்களின் பால் விலையை விட, ஆவின் பால் விலை மிகவும் குறைவு. ஆவின் பால் பொருட்கள், ஆண்டுக்கு, 560 கோடி ரூபாய்க்கு விற்பனையாகின்றன. பாலில் தண்ணீர் கலந்த விஷயங்கள் முன்னர் இருந்தன. தற்போது, அதெல்லாம் இல்லை. போதுமான தண்ணீர் உள்ளது. கால்நடைகளுக்கு இரை இருக்கிறது. எனவே, பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

