யு.ஜி.சி.,யின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் மாணவர்களுக்கு அமைச்சர் அழைப்பு
யு.ஜி.சி.,யின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் மாணவர்களுக்கு அமைச்சர் அழைப்பு
UPDATED : ஜன 29, 2025 01:18 AM
ADDED : ஜன 29, 2025 01:17 AM

சென்னை:''மாநில அரசின் பல்கலைகளை கைப்பற்ற நினைக்கும் யு.ஜி.சி.,க்கு, மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு, கல்வியில் முழு உரிமை உள்ளது. அந்த உரிமைகளை பறிக்கும் வகையில், கடந்த 6ம் தேதி, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு, புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.
மாநில உரிமைகளை பறிக்கவும், அந்தந்த மாநிலங்களின் கல்வி அமைப்பு முறையை சீர்குலைக்கவும், மத்திய அரசு எடுக்கும் முயற்சியே இது.
மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைகளை, யு.ஜி.சி., வாயிலாக கைப்பற்ற, மத்திய அரசு முயற்சிக்கிறது. பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. பொதுப்பட்டியலில் கல்வி உள்ளது.
ஆனால், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், கல்விக்கொள்கையை முடிவு செய்வது, மாநில உரிமைக்கு விடுக்கப்பட்ட சவால். மத்திய அரசின் கைப்பாவையாக யு.ஜி.சி., மாறியிருக்கிறது.
கல்விப்பணி சாராதவர்களும் துணைவேந்தர் ஆகலாம் என்பது, கல்வி சார்ந்த சிந்தனையாளர்களுக்கு போடப்பட்ட முட்டுக்கட்டை.
தொடர்ந்து கல்விப்பணியில் இருப்பவர்களால், அதில் உள்ள சிக்கல்களை, மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியும்.
பட்டப்படிப்பில் முதல் ஆண்டில், இரண்டாம் ஆண்டில் வெளியேறலாம் என்பது இடைநிற்றலுக்கு வழிவகுக்கும், தொழிற்கல்வியில் இருந்து பொதுக்கல்விக்கும், பொதுக் கல்வியிலிருந்து தொழிற்கல்விக்கும் மாறலாம் என்பது, பல சிக்கல்களை உருவாக்கும்.
இந்தியாவிலேயே உயர்கல்வியில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உயர் நிலையில் உள்ள, தமிழகத்தின் உயர்கல்வியை சீர்குலைக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
புதிய விதிகளை ஏற்காவிட்டால், பல்கலைகள் வழங்கிய பட்டங்கள் செல்லாது; யு,ஜி.சி., கூட்டங்களில் பங்கேற்க முடியாது; பல்கலை அங்கீகாரம் செல்லாது என, யு.ஜி.சி., சொல்கிறது. இது மிரட்டல், சர்வாதிகாரத்தை காட்டுகிறது.
வரும் பிப்ரவரி 5ம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.
எனவே, யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், regulations@ugc.gov.in என்ற இ - மெயிலில், 'புதிய விதிகளை திரும்பப் பெறு, மாநில உரிமைகளை, பல்கலை உரிமையை பறிக்காதே' என, எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்கே பின்தங்கி விட்டோம்?
ஒரு மாநில அரசில் என்னென்ன பணிகள்
நடக்கின்றன என்பதை, வளர்ச்சிக்கான தரவுகளை பார்த்து, படித்து புரிந்து,
கவர்னர் அறிக்கை வெளியிட்டிருந்தால், நாங்களும் வரவேற்று இருப்போம். உயர்
கல்வியில், கவர்னர் சொல்வது போல எங்கே பின்தங்கி உள்ளோம். பிஎச்.டி., ஆய்வு
மாணவர்கள், தமிழகத்தில் தான் முதலிடத்தில் உள்ளனர்.
வேந்தர் என்ற முறையில்
கவர்னர் ரவி, பல்கலையில் செய்யும் இடர்பாடுகளால் தான், ஒரு சில இடங்களில்
பேராசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த இடர்பாடுகளை களையவே சட்ட
போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். கவர்னர் ஏற்படுத்தும் தடைகளை உடைத்து,
உயர் கல்வித்துறையை, முதல்வர் ஸ்டாலின் முன்னேற்ற பாதையில் எடுத்து
செல்வார்.
- கோவி.செழியன், உயர் கல்வி துறை அமைச்சர்.