கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு டி.ஜி.பி.,யுடன் அமைச்சர் ஆலோசனை
கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு டி.ஜி.பி.,யுடன் அமைச்சர் ஆலோசனை
ADDED : நவ 14, 2025 01:00 AM
சென்னை:கோவில் திருவிழாக்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காவல் துறை உயரதிகாரிகள், அறநிலைய துறை மண்டல இணை கமிஷனர்களுடன், அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், திருச்செந்துார், திருவண்ணாமலை, திருத்தணி, பழனி உள்ளிட்ட, 13 பிரசித்தி பெற்ற கோவில்களில், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, மண்டல இணை கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் விளக்கினர். காவல் துறை உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
பக்தர்கள் விரைவாக தரிசிக்கும் வகையில், கூட்ட மேலாண்மைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அவற்றை செயல்படுத்த மண்டல இணை கமிஷனர்கள், அலுவலர்கள், அந்தந்த மாவட்ட காவல்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறநிலைய துறை செயலர் மணிவாசன், பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் ரவிச்சந்திரன், கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

