அமைச்சர் துரைமுருகன் பேச்சு மாற்றுத்திறனாளி போலீசில் புகார்
அமைச்சர் துரைமுருகன் பேச்சு மாற்றுத்திறனாளி போலீசில் புகார்
ADDED : ஏப் 08, 2025 08:17 PM
துாத்துக்குடி:மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் துரைமுருகன் மீது குற்றம்சாட்டி, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, ஏப்ரல் 5ம் தேதி நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் பொதுச்செயலரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசினார். இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் நீதிபாண்டியன், கோவில்பட்டி, நாலாட்டின்புத்துார் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சிகளை சாடுவதாக நினைத்துக் கொண்டு, மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசியுள்ளார். அவரது பேச்சு, மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு, அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவர், இவ்வாறு மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பொதுவெளியில் பேசி உள்ளது தவறு. அதனால், துரைமுருகன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையே, துரைமுருகன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரி, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாற்று திறனாளிகள் சங்கங்கத்தைச் சேர்ந்தோர் போராட்டம் நடத்தி உள்ளனர்.