1,000 தடுப்பணை கட்ட நிதி பெற முயற்சி அமைச்சர் துரைமுருகன் உறுதி
1,000 தடுப்பணை கட்ட நிதி பெற முயற்சி அமைச்சர் துரைமுருகன் உறுதி
ADDED : டிச 11, 2024 02:02 AM

சென்னை:''வரும் நிதியாண்டில், 1,000 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
ம.தி.மு.க., - பூமிநாதன்: மதுரை தெற்கு தொகுதியில் உள்ள, கிருதுமால் நதி, அனுப்பானடி வாய்க்கால், பனையூர் வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால் ஆகியவற்றை அரசு துார் வார முன்வருமா?
அமைச்சர் துரைமுருகன்: நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிருதுமால் நதியில், மழைக்காலங்களில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். கிருதுமால் நதியை துார் வாரி சீரமைக்க, 7.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; விரைவில் பணி துவக்கப்படும். வாய்க்கால்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன.
தி.மு.க., - தளபதி: கனமழையின் போது, மதுரை வடக்கு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செல்லுார் கால்வாயை மேம்படுத்த, கடந்த மாதம், 30ம் தேதி முதல்வர் கள ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் ஒதுக்கினார். நிரந்தரத் தீர்வாக செல்லுார் கால்வாயை துார்வார, 69 கோடி ரூபாய்க்கு, நீர்வளத்துறை மதிப்பீடு தயாரித்து, அதை நிறைவேற்ற வேண்டும்.
துரைமுருகன்: முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன்.
அ.தி.மு.க., - காமராஜ்: திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை விட, பாசன கால்வாய்கள் மேடாகி வருகின்றன. ஆறுகளில் குறைவாக தண்ணீர் வரும் போது, வாய்க்கால்களில் செல்வதில்லை. இந்த குறையை போக்க, வாய்க்கால்களை துார்வார வேண்டும். தேவையான தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
துரைமுருகன்: இதுவரை, 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். தடுப்பணை கட்டுவதால், ஆண்டு முழுதும் தண்ணீர் தேக்கப்பட்டு, நீராதாரம் கிடைக்கிறது.
தி.மு.க., - எழிலரசன்: காஞ்சிபுரம் பாலாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது. அதை பரிசீலித்து விஷார் கிராமம் அருகே, தடுப்பணை கட்ட வேண்டும்.
துரைமுருகன்: அனைத்து உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை தடுப்பணை கட்ட வேண்டும் என்பது. முதல்வரிடம் நிதி பெற்று, 1,000 தடுப்பணைகள் கட்ட அனுமதி பெற முயற்சிக்கிறேன்.
காங்., - செல்வப்பெருந்தகை: கடந்த வாரம் பெய்த மழையால், ஸ்ரீபெரும்புதுார் வரதராஜபுரம் பகுதியில், பல நகர்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில் கால்வாய் பணி அரைகுறையாக நடந்துள்ளது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றினால், வெள்ளம் ஏற்படாத பகுதியாக மாற்ற முடியும்.
எனக்கு தொகுதியில் நெருக்கடி உள்ளது. வரும் பட்ஜெட்டில், அமைச்சர் இதை நிறைவேற்ற அறிவிப்பு வெளியிடுவார் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன். நான் எம்.எல்.ஏ.,வாக இருப்பது, அமைச்சர் கையில்தான் உள்ளது என உத்தரவாதம் அளித்துள்ளேன்.
துரைமுருகன்: நீங்கள் கூறியது தெரியும். அதிகாரிகளை அழைத்து பேசி உள்ளேன்; நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

