கல் குவாரி உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
கல் குவாரி உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
ADDED : ஏப் 20, 2025 01:21 AM
சென்னை, ஏப். 20-
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல் குவாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் துரைமுருகன் நேற்று பேச்சு நடத்தினார்.
பாறைகளை வெட்டி எடுக்க உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு ரத்து, கனிம நில வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கல் குவாரி, 'கிரஷர்' உரிமையாளர்கள், கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் நேற்று, அமைச்சர் துரைமுருகன், கனிமவளத் துறை அதிகாரிகள், பேச்சு நடத்தினர்.
தமிழக கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி அளித்த பேட்டி:
அமைச்சர் நடத்திய பேச்சு, சுமூகமாக முடிந்தது. எங்களின் முக்கியமான, 24 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.
உயர்த்தப்பட்ட வரியை செலுத்தி தொழிலை நடத்த முடியாது. வரி உயர்வால் கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். கட்டுமான செலவு அதிகரிக்கும். ஏழை மக்களும் பாதிப்பர்.
எனவே, வரி உயர்வு உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை திரும்பப் பெறுவது குறித்து, முதல்வருடன் பேசி, திங்களன்று நல்ல முடிவை அறிவிப்பதாக, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டம் நடக்கிறது. அரசுக்கு எதிராக அல்ல. அமைச்சர், எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். மீண்டும் திங்களன்று பேச்சு நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.