ADDED : ஜூலை 08, 2025 05:08 AM
சென்னை: தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நம் நாளிதழில் கடந்த 5ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
நடப்பாண்டு 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். இச்செய்தி அடிப்படையில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். தி.மு.க., அரசு 2021ல் பொறுப்பேற்றபோது, 54,430 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தன.
நான்கு ஆண்டுகளில், கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர, தேவையான இடத்திற்கு அங்கன்வாடி மையங்களை இடமாற்றம் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நகரமயமாக்கல் காரணமாக, குறைவான குழந்தைகளுடன் அருகருகே இயங்கும் இரண்டு மையங்களை ஒன்றாக இணைக்க, ஆறு மாதங்களாக மறுசீரமைப்புக்கு புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இது, தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது; இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. மேலும், 7,783 அங்கன்வாடி காலி பணியிடங்களை நிரப்ப, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.