ADDED : மார் 29, 2025 07:00 AM
சென்னை; இலவச வேட்டி, சேலை திட்டத்தில், நெசவாளர்களுக்கான கூலி உயர்த்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் ஜவுளி தொழில், வர்த்தக மேம்பாட்டுக்கு வாங்குவோர் - விற்போர் சந்திப்பிற்கு என, ஆண்டுதோறும் சுழற்சி முறையில், சர்வதேச ஜவுளி கண்காட்சி, 1.50 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்
தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, துணிநுால் துறையில், மின் வணிக தள வசதியுடன் பிரத்யேக ஜவுளி வர்த்தக வசதி மையம், 50 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்
கோவையில் தமிழக பஞ்சாலை கழகத்தில், 45 லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி தறி அமைக்கப்படும்
ஜவுளி ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், குறு, சிறு, நடுத்தர, பெரிய, மிக பெரிய ஏற்றுமதியாளர்களுக்காக, ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்
வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில், 'பெடல்' தறி சேலைகளுக்கான கூலி, 69.79 ரூபாயில் இருந்து, 75.95 ரூபாயாக உயர்த்தப்படும்.
வேட்டிக்கு, 59.28 ரூபாயில் இருந்து, 64.38 ரூபாயாக உயர்த்தப்படும். கூலி உயர்வால், 14,000 பெடல் தறி நெசவாளர்கள் பயன் பெறுவர், இதனால் ஏற்படும் 3.75 கோடி ரூபாய் கூடுதல் செலவை அரசு ஏற்கும்
வேட்டி, சேலை திட்டத்தில் விசைத்தறி சேலைகளுக்கான கூலி, 43.01 ரூபாயில் இருந்து, 46.75 ரூபாயாகவும், வேட்டிகளுக்கு, 24 ரூபாயில் இருந்து, 26.40 ரூபாயாகவும் உயர்த்தப்படும்
பள்ளி மாணவர் சீருடை வழங்கும் திட்டத்திலும் நெசவு கூலி உயர்த்தப்படும்.
வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில், கைத்தறி மற்றும் பெடல் தறி சேலைகளுக்கான, நெசவுக்கு முந்தைய கூலி, 26.67 ரூபாயில் இருந்து, 28 ரூபாயாகவும், வேட்டிகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி, 12.36 ரூபாயில் இருந்து, 13 ரூபாயாக உயர்த்தப்படும். சாயமிடும் கட்டணம், ஒரு கட்டுக்கு, 130 ரூபாயில் இருந்து, 140 ரூபாயாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.