அண்ணாமலை அறிக்கை உண்மைக்கு புறம்பானது அமைச்சர் காந்தி பதில்
அண்ணாமலை அறிக்கை உண்மைக்கு புறம்பானது அமைச்சர் காந்தி பதில்
ADDED : பிப் 11, 2025 07:24 PM
சென்னை:'தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்' என, அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். அதற்கு அமைச்சர் காந்தி அளித்துள்ள பதில்:
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு பொங்கலுக்கு, தலா 1.77 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய, அரசாணை வெளியிடப்பட்டது. இவை, கைத்தறி, பெடல்தறி மற்றும் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சங்கங்களுக்கு வினியோகிக்கப்படும் நுால் ரகங்கள், அரசு நுால் கிடங்குகளில் பெறப்படுகின்றன. நுால் மாதிரிகள், தரப் பரிசோதனை செய்யப்பட்டு, தேர்வு பெற்ற நுால் மாதிரிகள் அடங்கிய லாட்டுகள் மட்டுமே, வேட்டி, சேலைகள் உற்பத்திக்கு அனுப்பப்படுகின்றன. பொங்கல் திட்டத்திற்கு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், கொள்முதல் செய்யப்பட்ட, வேட்டி பண்டல்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள், தரப் பரிசோதனை செய்யப்பட்டன.
அப்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளை விட, பாலியஸ்டர் சதவீதம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்ட, 13 லட்சம் வேட்டிகள் அடங்கிய பண்டல்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த ஆண்டு பொங்கல் திட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட வேட்டிகளை, தரப் பரிசோதனை செய்ததில், அதில் 100 சதவீதம் காட்டன் பாவு நுால் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே, இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட புகார்களுக்கு, எந்தவித முகாந்திரமும் இல்லை.
இந்த ஆண்டு சேலைகள் 15 வண்ணங்களிலும், வேட்டிகளில் அரை இன்ச் பார்டர் ஒரு இன்சாக அதிகப்படுத்தி, ஐந்து வண்ணங்களிலும், உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. தி.மு.க., அரசு அனைத்து தரப்பு மக்கள் நலனையும் உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு துறையிலும், சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கைத்தறி தொழிலின் வளர்ச்சி மற்றும் நெசவாளர்களின் நலனுக்காக, அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் 31ம் தேதி, 20க்கும் அதிகமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதில், கைத்தறி இயக்குனர் பணியிட மாற்றமும் ஒன்றாகும். இதை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது, மாநில அளவில் பொறுப்பில் உள்ள, அரசியல் கட்சி தலைவருக்கு உகந்ததல்ல.
நல்லாட்சி செய்து வரும், தி.மு.க., அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த, பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

