கார்த்திகை தீபம் காவி தீபமாகக் கூடாது அரசு கவனமாக இருப்பதாக அமைச்சர் தகவல்
கார்த்திகை தீபம் காவி தீபமாகக் கூடாது அரசு கவனமாக இருப்பதாக அமைச்சர் தகவல்
ADDED : டிச 07, 2025 02:15 AM
தஞ்சாவூர்: ''கார்த்திகை தீபமாக எரிய வேண்டியது, காவி தீபமாக மாறிவிடக் கூடாது,” என உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டி:
கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்க, சட்டசபை தீர்மானத்துக்கு கவர்னர் ரவி முறையாக ஒப்புதல் தராமல், ஜனாதிபதிக்கு அனுப்புவதாகக் கூறி காலம் தாழ்த்துகிறார்.
அவரால் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற பிறகும், மனம் திருந்தாத நிலையில் இருக்கிறார்.
கவர்னரின் செயல் குறித்து, டில்லியில் தி.மு.க., - எம்.பி.,க்கள் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளனர். ஜனாதிபதி தலையீட்டால், கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்க விரைவில் வழி கிடைக்கும் என நம்புகிறோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்ட நெறிமுறையின்படியே முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்; கலெக்டர், எஸ்.பி., ஆகியோரும் அதன்படியே செயல்பட்டனர். ஆன்மிகத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், திராவிட மக்களிடம் தீ மூட்டும் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் முறியடித்துள்ளார்.
கார்த்திகை தீபமாக எரிய வேண்டியது, காவி தீபமாக மாறிவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றக்கூடாது.
இவ்வாறு கூறினார்.

