' ப' வடிவ வகுப்பறைக்கு அரசாணை வௌியிடப்படவில்லை அமைச்சர் மகேஷ் விளக்கம்
' ப' வடிவ வகுப்பறைக்கு அரசாணை வௌியிடப்படவில்லை அமைச்சர் மகேஷ் விளக்கம்
ADDED : ஜூலை 17, 2025 12:27 AM
செங்கல்பட்டு,:''பள்ளிகளில் 'ப' வடிவில், மாணவர்களை அமர வைக்க, அரசாணை எதுவும் வெளியிடவில்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் கிராமத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டங்களில், அமைச்சர் மகேஷ் பங்கேற்றார். இக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தேசிய கல்வி கொள்கை பின்பற்றப்படும் மாநிலங்களில், மத்திய அரசால், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய, தேசிய அடைவு தேர்வு நடத்தப்படுகிறது; அதற்கு இணையாக, தமிழக அரசு சார்பில், மாநில அளவிலான அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட அடைவு தேர்வில், செங்கல்பட்டு மாவட்டம், மாநில அளவில் 36ம் இடத்தை பிடித்தது.
மாணவர்களின் புரிதல் திறனை அறியவே, அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வி கேட்கும் அளவிற்கு, மாணவர்களை உருவாக்க வேண்டும். அதுபோல், தான் கற்றதை, பிற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும், அவர்களை உருவாக்க வேண்டும்.
சில மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் உயர்ந்திருந்தாலும், அடைவுத்திறன் தேர்வில் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய, மாணவர்களுடன் ஆசிரியர்கள் உரையாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, பகுதி நேர ஆசிரியர்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தி உள்ளனர். முதல்வர் இது தொடர்பாக, நல்ல முடிவை அறிவிப்பார்.
''தற்போது, 'ப' வடிவிலான வகுப்பறை அமைப்பது, சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை,'' என்றார்.