ADDED : டிச 07, 2024 06:46 PM
திருச்சி:''ஆதவ் அர்ஜுன் பேச்சு குறித்து, தலைவர்கள் இருவரும் பேசி, தங்களுடைய கருத்துக்களை பரிமாறி கொள்ள வேண்டும்,'' -என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞர் அணி செயலருமான உதயநிதியின், 47வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், தி.மு.க.,வினர் 47 பேருக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கட்சியினருக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக, 3,000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மை தான்.
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் கண்டு கொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தற்போது, அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தி உள்ளோம். முதல்வரின் உத்தரவை பெற்று, அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும்.
வி.சி.க.,துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுன்,தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக கூறியுள்ளது குறித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியது போல, இரண்டு தலைவர்களும் பேசி, தங்களுடைய கருத்துக்களை பரிமாறி கொள்ள வேண்டும். இதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.