ADDED : ஏப் 30, 2025 06:15 AM
சென்னை : ''அரசு விடுதி மாணவி யருக்கு நான்கு மாத தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படும்,'' என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், குறைவான மாணவர் சேர்க்கை உள்ள 12 விடுதிகள், 4 கோடி, 15 லட்சத்து, 16 ஆயிரம் ரூபாய் செலவில், கல்லுாரி விடுதிகளாக மாற்றப்படும்.
புதுக்கோட்டை - ஆலங்குடி, கள்ளக்குறிச்சி - பாவந்துார், திருவள்ளூர் - பொன்னேரி, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் மற்றும் தஞ்சாவூரில், 3 கோடி ரூபாயில், 5 புதிய கல்லுாரி மாணவியர் விடுதிகள் துவக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளை பராமரிக்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த விடுதிகளில் மாணவ -- மாணவியர் எண்ணிக்கை தேவைக்கேற்ப உயர்த்தப்படும்.
விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ - மாணவியருக்கு, 16.24 கோடி ரூபாயில் வரவேற்பு தொகுப்பு வழங்கப்படும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட, 15 தனியார் விடுதி மாணவ - மாணவியருக்கு, மாதாந்திர உணவு மானியம், 1,000 ரூபாயில் இருந்து, 1,400 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு, 45.60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.
நீலகிரி, கொடைக்கானலில் உள்ள விடுதி மாணவர்களுக்கு, 200 இரண்டு அடுக்கு தேக்கு மரக்கட்டில்கள், டான்சி நிறுவனத்தின் வாயிலாக, 1.10 கோடி ரூபாயில் வழங்கப்படும்.
கல்லுாரி விடுதிகளில் தங்கி, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ - மாணவியருக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
விடுதி மாணவியருக்கு சுய பாதுகாப்பு, தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த, கலை, பண்பாட்டுத் துறை, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, தற்காப்புக் கலையில் நான்கு மாத அடிப்படை பயிற்சி, 4 கோடி, 31 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாயில் அளிக்கப்படும்.
மேலும், 60 கள்ளர் சீரமைப்பு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 75 லட்சம் ரூபாயில், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.