/
செய்திகள்
/
தமிழகம்
/
தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி நெருடல் பேச்சு
/
தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி நெருடல் பேச்சு
தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி நெருடல் பேச்சு
தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி நெருடல் பேச்சு
ADDED : அக் 19, 2024 07:51 PM
மதுரை:தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வுடன் ஏற்பட்ட மோதல் 'நீறு பூத்த நெருப்பாக' உள்ள நிலையில், மதுரையில் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியுடன் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பட்டா வழங்கிய விஷயத்தில் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக எம்.பி., வெங்கடேசன் பேச, தொகுதி பக்கமே எம்.பி., வருவதில்லை என்ற ரீதியில் 'கண்டா வரச்சொல்லுங்க' என அமைச்சரின் தொகுதியில் எம்.பி.,க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு வெங்கடேசன் பதிலடி கொடுக்க, 'பட்டா வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை( வெங்கடேசன்) நம்ப வேண்டாம்' என மூர்த்தி கூறியது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை லோக்சபா தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும் என தி.மு.க., மா.செ.,க்களான மூர்த்தி, தளபதி ஆகியோர் வலியுறுத்திய நிலையில், கூட்டணி தர்மத்திற்காக மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சிக்கே தலைமை ஒதுக்கியது.
மதுரை பார்லிமெண்ட் தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசனை வெற்றி பெற வைக்க வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியதை அடுத்து, அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தளபதி எம்.எல்.ஏ., ஆகியோர் கூட்டாக சேர்ந்து தேர்தல் பணியாற்றினர். இதையடுத்து, வெங்கடேசன் மீண்டும் வெற்றி பெற்று எம்.பி.,யானார்.
இருந்தபோதும், முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதால் உள்ளூர் அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகளிடம் வெங்கடேசனும் ஒருபோதும் நெருக்கமாக இருப்பதில்லை.
இந்நிலையில் கடந்த செப்.9ல் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில், மதுரையில் துணை முதல்வர் உதயநிதியை வைத்து 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் வெங்கடேசனும் பங்கேற்றார். இதற்கு போட்டியாக அக்.7 ல் மாநகராட்சி பகுதியில் வீட்டு மனை பட்டா இல்லாதோர் நுாற்றுக்கணக்கானோருடன் கலெக்டர் அலுவலகம் சென்றார் எம்.பி.,வெங்கடேசன். பின், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.
'10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தாங்க. ஆனால், மாநகராட்சி பகுதி ஏழைகளுக்கு பட்டா கொடுக்க வில்லை. அதற்கான அரசாணையும் வெளியிடாமல் உள்ளனர்' என அமைச்சர் மூர்த்தியை மறைமுகமாக சாடினார் வெங்கடேசன். இருந்தபோதும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பதால் தி.மு.க.,வினர் பொறுமை காத்தனர்.
'கண்டா வரச்சொல்லுங்க'
இதற்கிடையே மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட வண்டியூரில் மா.கம்யூ., கிளை மாநாடு நடந்தது. அதில், மதுரை முழுதும் ரோடுகள் மோசமாக இருப்பதாகவும், ரேஷன் பொருட்கள் தரமற்றதாக உள்ளதாகவும், எடை குறைவாகவும் இருப்பதாகவும் கூறி, அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதை மக்கள் பார்வைக்கு பேனராக வைத்தனர். இது மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடியாக 'கண்டா வரச் சொல்லுங்க...' என எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக மக்கள் ஒட்டியது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால், மக்கள் பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டியது தி.மு.க.,வினர் தான்.
இது வெங்கடேசனை கடுப்பேற்ற, 'நாங்க எங்கயும் ஓடிப்போய்டலை; இங்கதான் இருக்கோம். ரேஷன் கடையில் தரமான பொருள் வை என்றால் ஒருத்தனுக்கு கோபம் வருகிறது. மக்கள் போராட்டத்தில் நாங்கள் ஒரு நாளும் பின்வாங்கமாட்டோம்' என, அமைச்சர் மூர்த்தியை பெயர் குறிப்பிடாமல் ஒருமையில் எச்சரித்தார்.
நம்பி ஏமாற வேண்டாம்
இந்நிலையில் மதுரை ஆலாத்துாரில் நடந்த தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
மதுரையில் மீண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் பட்டா வழங்க இருக்கிறார்கள். இந்த காரியத்தை நான் தான் செய்தேன் என எவனும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து 'பட்டா கொடுக்கிறேன்' எனச் சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிட வேண்டும்.
தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரசாரம் செய்வதை, சம்பந்தப்பட்டவர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதல்வர் செய்து வருகிறார். நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு எப்படி பட்டா வழங்க முடியும். கிடைக்காததை கிடைக்கும் என்றும் வாங்கி தருவோம் என்றும் சொல்லியும் வருபவர்களை பொதுமக்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது.நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக உறுதுணையாக இருப்பதுதான் தி.மு.க.,இவ்வாறு அவர் பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து மா.கம்யூ., கட்சியும் தி.மு.க.,வுடன் முரண்டு பிடித்து வருகிறது. இரு கட்சியினரும் ஒருவரை மற்றொருவர் ஒருமையில் பேசி விமர்சிக்கின்றனர்; சவால் விடுகின்றனர். இது கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருதரப்பையும் சமரசம் செய்யும் முயற்சியில் இருகட்சிகளின் தலைமையும் இறங்கியுள்ளன.