'குடி'மகன்களுக்காக பாவப்படும் மந்திரி முத்துசாமி நிருபர் கேள்விக்கு மந்திரி சமாளிப்பு
'குடி'மகன்களுக்காக பாவப்படும் மந்திரி முத்துசாமி நிருபர் கேள்விக்கு மந்திரி சமாளிப்பு
ADDED : ஆக 13, 2025 03:59 AM
ஈரோடு: “டாஸ்மாக் கடைகளை மொத்தமாக எப்ப மூடுவீங்க,” என்ற கேள்விக்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேரடியாக பதில் அளிக்காமல் சமாளித்தார்.
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் அடையாளமாக காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மக்கள், விலங்குகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அடுத்து இரண்டு, மூன்று மாவட்டங்களில் செயல்படுத்துகிறோம். அங்கு வெற்றிகரமாகும் போது, பிற மாவட்டங்களிலும் அமலாகும்.
காலிபாட்டிலை திரும்ப தந்தால், 10 ரூபாய் வழங்குகிறோம். டாஸ்மாக்கை படிப்படியாக மூட வேண்டும் என்பதே முதல்வரின் திட்டம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அப்போது, நிருபர் ஒருவர், 'டாஸ்மாக் கடைகளை மொத்தமாக எப்பத்தான் மூடுவீங்க' என்று கேட்டதற்கு, அமைச்சர் கூறியதாவது:
ஒரே நாளில் கடைகளை மூட உத்தரவு போடலாம். அதன் விளைவு என்னாகும்... அதனால் தான் படிப்படியாக மூடப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல மது குடிப் போரை கொண்டு வரணும். இதுவரை, 500 கடை களை தான் மூடியுள்ளோம். மக்களை மாற்றி கொண்டு வர முயற்சிக்கிறோம்.
பாவம், அவர்கள் என்ன காரணத்துக்காக பழகினரோ... இதை நான் சமாளிப்பதற்காக கூறவில்லை. 'டெட்ரா பேக்கில்' மது கொண்டு வர நீதிமன்ற வழிகாட்டுதல், மக்கள் கருத்து சேகரிக்கப்பட்டது. அது, விற்பனையை உயர்த்துவதற்காக அல்ல.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.