வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது அமைச்சர் நாசர் அறிவிப்பு
வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது அமைச்சர் நாசர் அறிவிப்பு
ADDED : செப் 28, 2025 06:25 AM
சென்னை:'நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மத்திய அரசு அவசரமாக நடைமுறைப்படுத்திய, புதிய வக்பு திருத்த சட்டத்தின்படி, வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது' என, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு, 1995ம் ஆண்டு வக்பு சட்டத்தில் திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தை, 2025 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தியது.
இந்த சட்டத்திற்கு, தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதேபோல, பல்வேறு தரப்பினரும், இந்த சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வாறு தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த, 15ம் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது மேற்கண்ட வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மத்திய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய, புதிய வக்பு திருத்த சட்டத்தின்படி, வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.