ADDED : ஜன 25, 2024 12:57 AM
சென்னை:''தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வராது,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தமிழக குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு, 1.35 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட, 13 வாகனங்களை, அமைச்சர் வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 4.20 கோடி பேருக்கு மட்டுமே, குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 3 கோடி பேருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், இன்னும் 10 நாட்களில் துவங்கப்படும்.
அதேபோல், கோவை, மதுரையில் தலா, 15 கோடி லிட்டர், திருப்பூரில் 12 கோடி லிட்டர் குடிநீர் திட்டம், ஒரு மாதத்திற்குள் செயல்பாட்டு வரும்.
மேலும், ராமநாதபுரத்தில் 4,000 கோடி ரூபாய் குடிநீர் திட்ட பணி; ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்ட பணி, 10,000 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.
அதேபோல், திண்டுக்கல்லுக்கு வைகையாறு கூட்டு குடிநீர் திட்டம், பெரம்பலுாரில் தனி கூட்டு குடிநீர் திட்டம்; புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கூட்டு குடிநீர் திட்டம் என, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்க உள்ளன.
குடிநீர் வடிகால் வாரியத்தில், விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மழை வெள்ளத்தால் சென்னையிலும், காவிரி படுகையிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
எனவே, சென்னை ஏரிகளில் ஜூன் மாதம் வரை தேவையான தண்ணீர் உள்ளது. எனவே, சென்னை உட்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் சமாளித்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.