ADDED : பிப் 03, 2024 02:11 AM
சென்னை:அனுமதியின்றி ஒன்று கூடி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக அமைச்சர் நேரு உள்ளிட்டோருக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே 2016ல் ஏப்ரலில் அமைச்சர் நேரு தலைமையில் ஈ.வெ.ரா அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
முன் அனுமதி பெறாமல் ஒன்று கூடி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்ததாக அபிஷேகபுரம் வி.ஏ.ஓ. புகாரின்படி அமைச்சர் நேரு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அன்பில் பெரியசாமிக்கு எதிராக திருச்சி கண்டோன்ட்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்யக்அமைச்சர் நேரு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல பொது சிவில் சட்டத்தை எதிர்த்து 2019ல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க. மதுரை மாவட்ட செயலர் தளபதி மீது மதுரை நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் ரத்து செய்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

