திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு அமைச்சர் நேரு ஆதங்கம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு அமைச்சர் நேரு ஆதங்கம்
ADDED : அக் 17, 2025 07:33 PM
சென்னை: “திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நிலம் கிடைப்பதில்லை; அருகில் வசிக்கும் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,” என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - சரஸ்வதி: மொடக்குறிச்சி பேரூராட்சியில், 60,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை தொட்டி அமைத்து, போதுமான குடிநீர் வழங்க வேண்டும்.
வெங்கம்பூர் பேரூராட்சிக்கு கல்வெட்டுபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், திட க்கழிவு மேலாண்மை திட்டம் வாயிலாக உரப்பூங்கா அமைக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: ஏற்கனவே இருக்கும் தொட்டிகள் வாயிலாக, அங்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்ட அவசியம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிலம் கிடைப்பது பெரிய பிரச்னையாக உள்ளது.
நிலம் இருந்தால் மாவட்ட கலெக்டருடன் பேசி திட்டத்தை துவங்கலாம். அருகில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதை எம்.எல் .ஏ., சரிசெய்து கொடுக்க வேண்டும்.
தி.மு.க., - கருணாநிதி: கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக, பல்லாவரத்திற்கு குடிநீர் வழங்க, குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன. இங்கு, 10 எம்.எல்.டி., குடிநீர் தரவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
அமைச்சர் நேரு: மாமல்லபுரம் அருகே, 18 நகரங்கள் புதிதாக உருவாகியுள்ளன. அவற்றுக்கும் பல்லாவரம், தாம்பரம், மாங்காடு, பூந்தமல்லி, ஆவடி ஆகிய இடங்களுக்கும் குடிநீர் வழங்க, கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள், 4,200 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன.
இதன் வாயிலாக, 400 எம்.எல்.டி., குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள், 2027ம் ஆண்டு தான் முடியும். இருப்பினும், முதற்கட்டமாக 200 எம்.எல்.டி., குடிநீர் வழங்குமாறு கேட்டுள்ளோம். இப்பணிகள், பிப்ரவரி மாதம் முடியும் என நம்புகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.