வரி வசூலில் மேடு, பள்ளம் கூடாது ஒரே சீராக வசூலிக்க வேண்டும் அமைச்சர் நேரு வலியுறுத்தல்
வரி வசூலில் மேடு, பள்ளம் கூடாது ஒரே சீராக வசூலிக்க வேண்டும் அமைச்சர் நேரு வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2025 03:45 AM
மதுரை: ''வரி வசூலில் மேடு, பள்ளம் இருக்கக்கூடாது. அதாவது அதிகமாகவோ, குறைவாகவோ வசூலிக்கக்கூடாது. ஒரே சீராக வசூலிக்க வேண்டும்,'' என தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மதுரையில் பேசினார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 11 தென் மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணி குறித்த ஆய்வு கூட்டம் மதுரையில் நடந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
பட்ஜெட்டிற்கு முன் எந்தெந்த பணி முடிந்துள்ளது, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும், தாமதம் எனில் அதற்குரிய காரணத்தை ஆய்வு செய்ய கருத்துக் கோருவதற்காக இக்கூட்டம் நடந்தது. புதிய திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். ரூ.30 ஆயிரம் கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து திட்டப் பணியையும் முழுமையாக 10 மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
வரி வசூலில் மேடு, பள்ளம் இருக்கக்கூடாது. அதாவது அதிகமாகவோ, குறைவாகவோ வசூலிக்கக்கூடாது. இதில் அலுவலர்களுக்கு சிரமம் இருந்தால் துறையின் உயரதிகாரிகளிடம் விளக்கம் பெற்று சரியாக வசூலிக்க வேண்டும். குப்பை வரி வசூலிலும் சரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். வரி வசூலில் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.
சாலை பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதை மழைநீர் வடிகால் வசதியுடன் செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். பாதாளாச் சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே ஐந்தரை லட்சம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையை கண்டறிந்து எல்.இ.டி., மின்விளக்குகளாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
மாநகராட்சி பகுதிகளுடன் சில ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைக்க அரசாணை வெளியிட்டதற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நேரு,''கலெக்டரிடம் மனு அளிக்க 120 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,''சென்னை, திருச்சி மாநகராட்சிகளுக்கு இணையாக மதுரை மாநகராட்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என்றார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, சாத்துார் ராமச்சந்திரன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், எம்.பி.,க்கள் கனிமொழி, தங்க தமிழ்ச்செல்வன், ராணி, ராபர்ட் புரூஸ், சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சிகளின் மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மதுரை கலெக்டர் சங்கீதா, அலுவலர்கள் பங்கேற்றனர்.