அமைச்சர் பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்கணும்: பா.ஜ.,
அமைச்சர் பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்கணும்: பா.ஜ.,
ADDED : பிப் 05, 2026 03:26 AM
சென்னை: 'வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்புணர்வை, தி.மு.க., தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது அருவருப்பானது மட்டுமின்றி, ஆபத்தும் நிறைந்தது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், ஏற்கனவே வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடி கொண்டிருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் தான் வடக்கர்கள் தமிழகத்திற்கு வருகின்றனர்' என, அமைச்சர் பன்னீர்செல்வம் எள்ளி நகையாடியுள்ளார்.
தன் ஆணவ பேச்சிற்கு அமைச்சர் உடனே மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சகோதரத்துவத்தை பறைசாற்றிய நம் தமிழ் மண்ணில், வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்புணர்வை தி.மு.க., தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது அருவருப்பானது மட்டுமின்றி, ஆபத்தானதும் கூட.
வடக்கு, தெற்கு என, இன ரீதியாக மக்களை பிரித்தாள துடிக்கும் தி.மு.க.,வின் பிளவுவாத அரசியலை, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் ஆமோதிக்கின்றனவா?
'இமயம் முதல் குமரி வரை' ஒருமித்த பண்பாட்டு கலாசாரத்தை பகிர்ந்து கொள்ளும் நம் பாரதத்தில், ஆட்சியை பிடிக்கவும் அதிகாரத்தை கைப்பற்றவும் வட மாநில மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்த துடிக்கும் தி.மு.க., எனும் நஞ்சுக்கொடியை, வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் பிடுங்கி எறிவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

