தொடக்க கூட்டுறவு சங்க பயிர் கடன் விண்ணப்பித்த அன்றே கிடைக்கும் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
தொடக்க கூட்டுறவு சங்க பயிர் கடன் விண்ணப்பித்த அன்றே கிடைக்கும் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
ADDED : ஏப் 09, 2025 01:42 AM
சென்னை:''தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், இணையதள வழியில் பயிர் கடனுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகள் வங்கி கணக்கில் கடன் தொகையை நேரடியாக செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படும்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் அவர், வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில், நடப்பு நிதியாண்டில், 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்
விவசாயிகள் பயிர் கடன் பெற, கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து, ஒரு வாரத்திற்குள் கடன் பெறும் நடைமுறை உள்ளது. காலதாமதத்தை தவிர்க்க, இணையதள வழியில் பயிர் கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கி கணக்கில், கடன் தொகையை செலுத்தும் நடைமுறை, தர்மபுரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும். பின், தமிழகம் முழுதும் விரிவுபடுத்தப்படும்
நிலமற்ற ஏழை பெண் விவசாயிகள், விவசாய நிலம் வாங்க, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய, 1,000 மகளிருக்கு, மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்கள் வாங்க, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக தலா, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்
வணிக வங்கிகளை போல, இணையதளம் வாயிலாக சேமிப்பு கணக்கு துவக்குதல், பல வகை கடன்களை இணையதள வழியில் பெறுதல், மொபைல் வங்கி சேவை, கிரெடிட் கார்டு போன்ற வங்கி சேவைகள், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும்
விவசாயிகளிடம் இருந்து எண்ணெய் வித்துக்களை நேரடியாக கொள்முதல் செய்து, மதிப்புக்கூட்டி தரமான எண்ணெய்யை குறைந்த விலையில் விற்க, நான்கு எண்ணெய் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும்
வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில், 2.49 கோடி ரூபாயில் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் ஆலைகள் அமைக்கப்படும்
மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் நுகர்வு பொருட்களை, கூட்டுறவு பண்டகசாலைகள் தரமாகவும், நியாயமான விலையிலும் விற்கின்றன. இந்த பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, வினியோகம் செய்யும் வகையில், விரைவு வணிக முறை செயல்படுத்தப்படும்
கார்டுதாரர்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்களை பெற, 2,500 ரேஷன் கடைகள் பொலிவூட்டப்படும்