மயில் முட்டைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை அமைச்சர் பொன்முடி உறுதி
மயில் முட்டைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை அமைச்சர் பொன்முடி உறுதி
ADDED : ஜன 11, 2025 09:34 PM
சென்னை:''வன விலங்குகளை கூடுமானவரை வனத்திற்குள் வைத்திருக்க, வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மயில் முட்டைகளை அப்புறப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன,'' என, வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - அக்ரி கிருஷ்ணமூர்த்தி: திருவண்ணாமலை மாவட்டம், காப்புகாட்டில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால், 10 கால்நடைகள் இதுவரை கொல்லப்பட்டு உள்ளன.
அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும்; பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில், சிறுத்தையை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: காட்டில் பன்றி, மயில், மான், யானை, சிங்கம், சிறுத்தை எல்லாவற்றையும் பிடித்து விட்டால், அங்கு என்ன இருக்கும்?
அ.தி.மு.க., - செங்கோட்டையன்: காட்டுப் பன்றியை அழிப்பதற்கு, முந்தைய ஆட்சியில் விவசாயிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டது.
அதேபோன்று வழங்கப்படுமா? மயில் முட்டைகளை அப்புறப்படுத்துவோருக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு பரிசீலிக்குமா?
அமைச்சர் பொன்முடி: கேரளாவில் வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றி நீக்கப்பட்டதாக கூறுவது, தவறான செய்தி.
தமிழகத்தில், காட்டில் இருந்து 3 கி.மீ., வெளியே வரும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு, இப்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
காட்டுப் பன்றியை வனத்துறை தான் சுட வேண்டும். எல்லாருக்கும் அனுமதி அளித்தால், சுட்டு இறைச்சிக்காக எடுத்து செல்வர்.
புதிய சட்டத்தை கண்காணித்து நடைமுறைப்படுத்த மாவட்ட கலெக்டர், வனவிலங்கு அதிகாரி, உள்ளாட்சி அதிகாரி, வருவாய் அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
வன விலங்குகளை கூடுமானவரை வனத்திற்குள் வைத்திருக்க, வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மயில் முட்டைகளை அப்புறப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.

