சர்ச்சை பேச்சால் பதவியை இழக்கும் அமைச்சர் பொன்முடி
சர்ச்சை பேச்சால் பதவியை இழக்கும் அமைச்சர் பொன்முடி
ADDED : ஏப் 12, 2025 01:22 AM
விழுப்புரம்:சென்னையில் நடந்த தி.க., கூட்டத்தில் பேசிய, வனத்துறை அமைச்சர் பொன்முடி, ஹிந்துக்களின் வழிபாட்டையும், பெண்களையும் கொச்சையாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால், அமைச்சர் பொன்முடி துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து, அதிரடியாக நீக்கப்பட்டதாக நேற்று காலை அறிவிப்பு வெளியானது.
சட்டசபை விடுமுறை என்பதால், கடந்த 2 தினங்களாக விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.
அவரது பதவி பறிக்கப்பட்ட தகவல் அறிந்த கட்சி நிர்வாகிகள் பலர், அவரது வீட்டிற்கு திரண்டனர். இதனால், வேதனையிலிருந்த அமைச்சர் பொன்முடி, மதியம் 12.30 மணிக்கு, விழுப்புரத்திலிருந்து தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார்.
சென்னையில் உள்ள வீட்டிற்கு செல்லும் அவர், அங்கிருந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, இந்த சர்ச்சை சம்பவம் குறித்து விளக்கமளிப்பார் என, கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., சீனியர் அமைச்சரான பொன்முடி, துணை பொதுச்செயலராகவும், உயர்கல்வி அமைச்சராகவும் இருந்தார். ஏற்கனவே, அரசு விழாக்களில் பேசியபோது, மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தை, ஓசி பஸ் என விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.
கடந்தாண்டு, விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் இரு தரப்பு வழிபாட்டு பிரச்னையால் மூடப்பட்ட நிலையில், அதில் ஒரு தரப்பு மக்களை அழைத்து பேசிய அமைச்சர் பொன்முடி, அவர்களது வழிபாட்டை அவமதித்து பேசியதாகவும், மக்கள் விமர்சித்தனர்.
அடுத்த சில நாட்களில் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கி, அமைச்சர் பதவியை இழந்தார். கோவில் விவகாரத்தில் அரசியல் செய்ததால், பலனை அனுபவிக்கிறார் என மக்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் நேற்று இடித்து அகற்றப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தி.மு.க., ஆட்சி என்பதால் கோவில் இடித்து அகற்றப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் கேட்டுக்கொண்டதால், நிறுத்தியிருந்தனர். ஆனால், அமைச்சர் பொன்முடியிடம் முறையிட்டும், அவர் கண்டுகொள்ளாததால் இடித்து அகற்றப்படுகிறது. தி.மு.க., வினர் ஓட்டு கேட்டு வரமுடியாது, அவர்களின் பதவி நீடிக்காது என்றனர்.
இந்நிலையில் தான், திடீரென அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சால் துணை பொதுச்செயலர் பதவி பறித்து அறிவிப்பு வெளியானது. கடவுள் நம்பிக்கையில்லாத அமைச்சர் பொன்முடி, தி.க., வழி வந்தவர் என்றாலும், மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் தனது சர்ச்சை பேச்சையும், தேவையில்லாத விமர்சனங்களையும் தவிர்க்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்களே புலம்புகின்றனர்.

