பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமைச்சர் பொன்முடி, மகன்கள் ஆஜர்
பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமைச்சர் பொன்முடி, மகன்கள் ஆஜர்
ADDED : மார் 19, 2025 07:58 PM

சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜராகினர்.
தற்போது வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, 2006,- 2011ம் ஆண்டுகளில், கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவரது மகன் கவுதம சிகாமணிக்கு, விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் எடுக்க, 2007ல் அரசு அனுமதி அளித்தது.
பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, செம்மண் அள்ளியதில் அரசுக்கு, 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.பி.,யான கவுதம சிகாமணி, உறவினர் ராஜ மகேந்திரன் உள்பட ஆறு பேருக்கு எதிராக, 2023 ஆக., 21ல் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 12வது கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ், சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
அதில், அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி, ராஜ மகேந்திரன் மற்றும் அவர்கள் பங்குதாரர், நிர்வாக இயக்குனர்களாக இருந்து வரும் மருத்துவமனை, நிறுவனங்கள் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் உள்ளிட்டோரை நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பி உத்தரவிட்டது.
அதன்படி, அவர்கள், சென்னை 12வது கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்றத்தில், நேற்று நேரில் ஆஜராகினர். அப்போது, அடுத்த கட்ட விசாரணைகளுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி, அமைச்சர் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு, அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எழில்வேலவன், விசாரணையை மே 9க்கு தள்ளிவைத்தார்.