பொய் பேசுவதில் இ.பி.எஸ்.,க்கு நிகர் யாரும் இல்லை; அமைச்சர் ரகுபதி விமர்சனம்
பொய் பேசுவதில் இ.பி.எஸ்.,க்கு நிகர் யாரும் இல்லை; அமைச்சர் ரகுபதி விமர்சனம்
ADDED : டிச 31, 2024 04:20 PM

சென்னை: பொய் பேசுவதில் இ.பி.எஸ்.,க்கு நிகர் யாரும் இல்லை என்று சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
அரசியல் இருப்பைக் காட்ட தமிழக மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் இ.பி.எஸ். அருவருப்பு அரசியல் செய்யும் மனநிலையையை பழனிசாமி நிறுத்த வேண்டும்.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு தினமும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
ஊடகத்தில் வந்த செய்தி ஊடகத்தில் வந்த செய்தி என சொல்லி வதந்திகளை மட்டும் தானே பரப்பி வந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையான நேர்மையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்பதை மக்கள் நன்கறிவர்.
அரசிடம் நேர்மையும் உண்மையும் இருக்கும் காரணத்தினால்தான் அ.தி.மு.க., முன் வைக்கும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் எங்கள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். காவல்துறை தான் FIR யை வெளியிட்டுள்ளது என்ற அபாண்ட பொய்யை முதலில் பரப்பினார். அதற்கு அவர் ஆதாரமாக சொன்னதும் பத்திரிகை செய்தி தான். சென்னை மாநகர காவல் ஆணையர் FIR யை காவல்துறை வெளியிடவில்லை மத்திய அரசு IPC யிலிருந்து BNS க்கு மாற்றம் செய்ததால் ஏற்பட்ட டெக்னிக்கல் பிரச்சனையால் FIR வெளியானது என விளக்கம் அளித்தார்.
ஆனால் அதையும் ஏற்காமல் தொடர்நது பொய் பரப்பி வந்தார் இ.பி.எஸ். தற்போது FIR கசிந்த விவகாரத்தில் மத்திய அரசு இணைய தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று NIC (National Informatics Centre) அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. இப்போது அற்பத்தனமாக பொய் பேசிய அவர், நியாயமாக மக்கள் முன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் ஆனால் கேட்டாரா இல்லை அடுத்த பொய்க்கு தாவிவிட்டார்.
குற்றவாளி ஞானசேகரன் 'சார்?' என்று யாரிடம் போனில் பேசினான் என்று கேட்டார்கள். அவன் அந்த மாணவியை மிரட்டுவதற்காகவே அப்படி போனில் பேசுவதாக நடித்திருக்கிறான் என காவல்துறை ஆணையர் விளக்கியிருக்கிறார். விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது. இப்படி உண்மைகள் வெளிப்படையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உண்மைகளை தாங்கி கொள்ள முடியாமல் அற்ப அரசியலில் ஈடுபடும் இ.பி.எஸ்., எதையோ மறைப்பதாக உளறி வருகிறார். இந்த வதந்தி அரசியல் எல்லாம் ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது.
சரித்திரப் பதிவேடு குற்றவாளியை கண்காணிக்காதது ஏன் என பொங்குகிறார். 2014 முதல் 2019 வரையில் தான் ஞானசேகரன் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் அப்போது யார் ஆட்சி செய்தது என்பதை மறந்துவிட்டாரா? பல குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க இ.பி.எஸ்., ஆட்சி என்ன முயற்சி எடுத்தது? பாலியல் குற்றம் செய்தவனை வெறும் திருட்டு வழக்கு மட்டும் போட்டு குற்றவாளியை தப்பிக்கவிட்ட மோசமான ஆட்சி தான் இ.பி.எஸ்., ஆட்சி. அப்போதே கடுமையாக தண்டித்திருந்தால் இன்று இதுபோன்ற நிகழ்வே நடந்திருக்காது.
அச்ச உணர்வை மாணவிகளிடமும் பெற்றோரிடமும் ஏற்படுத்தும் உள்நோக்கம் என்னவென்று மக்கள் புரிந்து கொள்வார்கள். கூசாமல் பொய் சொல்வதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்கிற அளவில்தான் அவர் கூறிய நிகழ்வுகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.