திட்டமிட்டு பரப்பப்படும் பொய்களை முறியடித்து விண்வெளி துறையில் தமிழகம் முன்னேறும்: அமைச்சர் ராஜா நம்பிக்கை
திட்டமிட்டு பரப்பப்படும் பொய்களை முறியடித்து விண்வெளி துறையில் தமிழகம் முன்னேறும்: அமைச்சர் ராஜா நம்பிக்கை
ADDED : ஏப் 20, 2025 12:31 AM

சென்னை: 'திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறியடித்து, விண்வெளி துறையில் தமிழகம் முன்னேறும்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எந்த துறையாக இருந்தாலும், அதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் தமிழகத்தின் மற்றும் ஒரு அறிவியல் பாய்ச்சல் தான், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள, விண்வெளி தொழில் கொள்கை - 2025.
இரு ஆண்டுகளுக்கு மேலாக, இதற்கான திட்டமிடல்களும், தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு, ஐ.ஐ.டி., உட்பட உயர் நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்புடன், இக்கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், சென்னை ஐ.ஐ.டி., மற்றும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'அக்னிகுல்' உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய தமிழக நிறுவனங்களுடன், இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனங்களை கொண்டு, தமிழகத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மகத்தான முயற்சிக்கான, 'லாஞ்ச் பேட்' ஆக விண்வெளி தொழில் கொள்கை அமைந்துள்ளது.
ஆனால், தமிழக நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்க்கட்சிகள், நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும் ஒரு நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல்.
எந்தவித முதலீடும் செய்யாத அந்நிறுவனத்திற்கும், இந்த கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகளுக்கு, இந்த வீனர்கள் கொடுக்கும் பரிசா இது?
நம்மை பார்த்து, 'காப்பி' அடித்து, குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது. அது, அடிமைகளின் முதலாளிகளின் நண்பர்களுக்காகவா?
அவர்களை விட சிறப்பாக, தமிழகம் ஒரு கொள்கையை தயார் செய்து விட்டதே என்ற வயிற்றெரிச்சல் காரணமாகவா?
தமிழகத்தை வஞ்சிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கும் கட்சியினரும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்ட கட்சியினரும் திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறியடித்து, விண்வெளி தொழிலிலும் தமிழகம் முன்னேறும்.
ராக்கெட் மேலே கிளம்பும் போது, கீழே புகையும் நெருப்பும் வருவதை பார்க்கலாம். அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் விண்வெளி தொழில் வளர்ச்சி, ராக்கெட் போல் உயரட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

