நேரலையில் சட்டசபை நிகழ்வுகள் அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவாதம்
நேரலையில் சட்டசபை நிகழ்வுகள் அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவாதம்
ADDED : ஜூன் 21, 2026 01:37 AM
சென்னை: ''சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார்.
அவர் அளித்த பேட்டி:
சென்னை அரசு பள்ளியில் மாதவிடாய் காரணமாக, 11 வயது மாணவியை பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற பிற்போக்குத்தனங்களை ஏற்க முடியாது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை வழங்க உத்தரவிட்டுள்ளேன். அரசு, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கு மாதவிடாய் காலத்தில் எவ்வித அழுத்தங்களையும் வழங்க கூடாது.
அரசு பள்ளி வகுப்பறையில், முதல்வரின் புகைப்படத்தை மாட்டி, தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
அரசு பள்ளிகளில் அப்துல் கலாம், 'இஸ்ரோ' சிவன், மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள், ஆளுமைகள், கல்வியாளர்கள் புகைப்படங்களை மாட்டினால், முதல்வர் விஜய் மகிழ்வார்.
எந்த ஒரு பள்ளி நிர்வாகமும், கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு வெளிப்படை தன்மையுடன், எந்தவித கட்டண வசூலும் இன்றி, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனால், மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைக்குமாறு கோரியுள்ளோம். குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வரை கட்டணத்தை குறைக்க தனியார் பள்ளிகள் முன்வர வேண்டும்.
தமிழக சட்டசபை நிகழ்வுகள் நேரலை ஒளிபரப்பு இருப்பதாக கருதிதான், நீண்ட நேரம் நான் பேசினேன். ஆனால், வெளியே வந்த பின்தான், நேரலை நிறுத்தப்பட்டது தெரியவந்தது. துறைசார்ந்த அதிகாரிகளுடன் பேசி, சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
