மதுரை மண்டல தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்ற அமைச்சர்; மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் திருப்பம்
மதுரை மண்டல தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்ற அமைச்சர்; மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் திருப்பம்
ADDED : ஜூலை 08, 2025 04:37 AM

மதுரை : மதுரை மாநகராட்சியில் விதிமீறி, பல கோடி ரூபாய் வரிவிதிப்பு முறைகேடு நடந்தது தொடர்பாக, மேயர் இந்திராணி, ஐந்து மண்டல தலைவர்களிடம், அமைச்சர் நேரு நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் வணிக கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ததில், 2023 - 2024ல் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து, ஐந்து பில் கலெக்டர்களை அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் சஸ்பெண்ட் செய்தார்.
இவ்விவகாரத்தில் வரிவிதிப்பு குறித்த கமிஷனரின் பாஸ்வேர்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில், மீண்டும் விசாரணை மேற்கொள்ள தற்போதைய கமிஷனர் சித்ரா அனுமதியளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார், 10 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
மாநகராட்சி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர், மண்டலம் மூன்றின் தலைவரின் நேர்முக உதவியாளர், உட்பட, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, ஐந்து மண்டல தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் நேரு, மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
கடைசியாக, நான்கு மண்டல தலைவர்களை ஒன்றாக வைத்தும் விசாரணை நடந்தது. தொடர்ந்து மேயர் இந்திராணியும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், விசாரணை நடந்தது.
மண்டல தலைவர்கள் சிலர் கூறுகையில், 'எங்களுக்கும் வரிக்குறைப்பு முறைகேட்டிற்கும் சம்பந்தம் இல்லை. தவறு செய்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்கிறேன் என, கடிதம் கேட்டனர். அனைவரும் கொடுத்துள்ளோம்.
'இதுபோல் நிலைக் குழு தலைவர்கள் இருவரும் கடிதம் அளித்தனர். மேயரிடம் கடிதம் பெறவில்லை. அவரை அமைச்சர் நேரு எச்சரித்து அனுப்பினார்' என்றனர்.
முதல்வர் உத்தரவின் பேரில் மண்டல தலைவர்களிடமும், நிலைக்குழு தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளதால், விரைவில், அவர்கள் ராஜினாமா ஏற்கப்படும் என தெரிகிறது.

