தேர் திருப்பணிக்கு நிதியுதவி அளியுங்கள் எம்.எல்.ஏ.,விடம் அமைச்சர் கோரிக்கை
தேர் திருப்பணிக்கு நிதியுதவி அளியுங்கள் எம்.எல்.ஏ.,விடம் அமைச்சர் கோரிக்கை
ADDED : பிப் 16, 2024 12:39 AM
சென்னை:ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் தேர் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கும்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,விடம், அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் - ஊர்வசி அமிர்தராஜ்: துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரில், கைலாச நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் சிதிலமடைந்ததால், 50 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. தேரை சரி செய்து மீண்டும் தேரோட்டத்தை நடத்த வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, 41.53 கோடி ரூபாயில், 71 புதிய தேர்களை உருவாக்கும் பணிகளும், 7.41 கோடி ரூபாயில், 41 கோவில்களில் பழுதடைந்த தேர்களை மராமத்து செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
உறுப்பினர் கூறிய கோவில், போதிய நிதி ஆதாரம் இல்லாத கோவிலாக உள்ளது. எனினும், 1.16 கோடி ரூபாயில் புதிய தேர் உருவாக்க, அனைத்து நிலைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பொதுநல நிதியிலிருந்தும், கோவில் மற்றும் உபயதாரர் நிதி மூலம், பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
உறுப்பினர் மனது வைத்து, 1.16 கோடி ரூபாயை, உபயதாரர் நிதியாக வழங்கி, தேர்தல் பணிகளை துவக்குவதாக தெரிவித்தால், இந்த மாத இறுதிக்குள் அனைத்து உத்தரவுகளையும் வழங்கி உங்களோடு நானும் இணைந்து, திருத்தேர் திருப்பணி துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.
ஊர்வசி அமிர்தராஜ்: அரசு அதை முன்வந்து மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் தேருக்கு கொட்டகை அமைக்க அரசு முன்வருமா?
அமைச்சர் சேகர்பாபு: இம்மாத இறுதிக்குள் திருத்தேர் கொட்டகை பணி துவக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.