தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலையில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அமைச்சர் சாமிநாதன் தகவல்
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலையில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அமைச்சர் சாமிநாதன் தகவல்
ADDED : ஜூலை 31, 2024 12:09 AM

சென்னை:தரமணியில் உள்ள, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 'தமிழால் முடியும்' என்ற தலைப்பில், மூன்று நாள் வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி வகுப்பு துவங்கியது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த இளங்கலை, முதுகலை தமிழ், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் என, 200 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று, இன்று, நாளை என, மூன்று நாள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில், தமிழ் வழிக் கல்வி கற்போருக்கு பல்வேறு துறை சார்ந்த வேலை, தொழில் வாய்ப்புகள் குறித்து, 24 தமிழ் அறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.
நேற்று துவங்கிய முதல் நாள் பயிற்சி வகுப்பில், 'தமிழில் மருத்துவம்' எனும் தலைப்பில், மருத்துவர் சொக்கலிங்கம் பேசியதாவது:
தமிழ் மொழி, 50,000 ஆண்டுகள் பழமையானது. 'தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. தமிழும் நாமும் வேறல்ல; தமிழே நமக்கு வேராக உள்ளது. சுத்தமான தேன், தானும் கெடாது. தன்னோடு இருப்பதையும் கெடுக்காது. அதுபோல் தான் நம் தமிழ் மொழி.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்,''மொழி என்பது வைரம். தாய் மொழியில் கற்கும் மாணவர்கள், பட்டை தீட்டப்பட்ட வைரம். தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
முன்னதாக, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் வரவேற்புரையாற்ற, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் பவானி நன்றியுரை வழங்கினார்.

