முருகன் மாநாடு அழைப்பிதழ் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
முருகன் மாநாடு அழைப்பிதழ் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
ADDED : ஜூன் 20, 2025 06:44 AM

சென்னை : மதுரையில், நாளை மறுநாள் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு அழைத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்?
இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுபடுத்தும் மாநாட்டை முருகன் பெயரில் மதுரையில் நடத்துகின்றனர். கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம். தி.மு.க., ஆட்சியில், 117 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பழனியில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. முருக கடவுளுக்கு சிறப்பு செய்யும் ஆட்சியாக, தி.மு.க., அரசு இருக்கிறது. ஏற்கனவே, வேலை கையில் எடுத்துக்கொண்டு, பா.ஜ.,வினர் ஊர் ஊராக சுற்றினர்; அதில் கிடைத்தது பூஜ்யம் தான். தமிழக முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் தான் முருகன் இருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்றபோது, முருகன் மாநாட்டுக்கான அழைப்பிதழை என்னிடம் தந்தனர். முருகன் படம் அதில் இருந்ததால் வாங்கினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.