வீடுகளுக்கு மேல் தொங்கும் மின் கம்பிகளை சொந்த பணத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அகற்றலாமே! அமைச்சர் செந்தில் பாலாஜி யோசனை
வீடுகளுக்கு மேல் தொங்கும் மின் கம்பிகளை சொந்த பணத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அகற்றலாமே! அமைச்சர் செந்தில் பாலாஜி யோசனை
ADDED : ஏப் 10, 2025 05:59 AM
சென்னை: ''வீடுகளுக்கு மேல் தொங்கும் மின் கம்பிகளை மாற்றி அமைப்பதற்கான கட்டணத்தை, தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ.,க்கள் செலுத்தலாம்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
தி.மு.க., - நந்தகுமார்: அணைக்கட்டு தொகுதி, வண்ணாந்தாங்கல் ஊராட்சியில், வீடுகளுக்கு மேல் உயர் மின் அழுத்த கம்பி செல்கிறது. அதை மாற்ற, 2.94 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றனர். பொது மக்கள் அந்த பணத்தை செலுத்திய பின்னும், மின் கம்பிகள் மாற்றி தரப்படவில்லை.
வீடுகளுக்கு மேல் அனுமதி இல்லாமல், மின் கம்பிகளை அமைக்கின்றனர். அதை மாற்றும்போது பணத்தை கேட்பதால், ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர்.
மின் கம்பி அமைக்கும்போதே, அது வீடுகளின் மேல் செல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: சில இடங்களில் மின் கம்பி அமைத்த பின், வீடு கட்டுகின்றனர். இதை, எம்.எல்.ஏ., கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சேபம் காரணமாக, மின் கம்பிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.
அ.தி.மு.க., - இசக்கி சுப்பையா: அம்பாசமுத்திரம் தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் வீடுகளுக்கு மேல் மின் கம்பிகள் செல்கின்றன.
அவற்றை அகற்றுவதற்கு கட்டணம் செலுத்த சொல்கின்றனர். அரசே கட்டண செலவினத்தை ஏற்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: மின் வாரியத்திற்கு விதிகள் உள்ளன. மின் வழித்தடங்களை மாற்றி அமைக்க, விண்ணப்பம் வழங்கும்பட்சத்தில், திட்ட மதிப்பீடு தொகை தயார் செய்யப்படும்.
அதை செலுத்தினால், மின் வழித்தடம் மாற்றி அமைக்கப்படும். தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ.,க்களே அந்த கட்டணத்தை செலுத்தலாம்.
தி.மு.க., - ராமச்சந்திரன்: மலை மாவட்டமான நீலகிரியில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் புயல் காற்று வீசுவதால், மின்சார கம்பிகள், 100க்கும் மேற்பட்ட இடங்களில் துண்டிக்கப்படுகின்றன. அவற்றை சரி செய்வதற்கு, ஒரு வாரம் வரை ஆகிறது.
இதனால், மாணவர்கள் படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. எனவே, பூமிக்கடியில் மின் கேபிள்களை அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: நீலகிரி மாவட்டத்தில் மழையால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் இடங்களில், பூமிக்கடியில் மின் கேபிள்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மின் வாரியத்தின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தேவை ஏற்படும் இடங்களில் மின் கேபிள்களை பூமிக்கடியில் அமைக்க, அரசு முன்னுரிமை அளிக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

