அதானியை முதல்வர் சந்திக்கவில்லை அவதுாறு பரப்பினால் நடவடிக்கை; அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
அதானியை முதல்வர் சந்திக்கவில்லை அவதுாறு பரப்பினால் நடவடிக்கை; அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
ADDED : டிச 07, 2024 02:54 AM
சென்னை: 'தொழிலதிபர் அதானியை, முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை; அந்த தனியார் நிறுவனத்துடன், தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்படவும் இல்லை' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து, அதானியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும், தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை, கட்டுக்கதைகள் போல வெளியிடுகின்றன.
கட்டாய விதி
அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற, எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை.
'ஒவ்வொரு மாநிலத்திலும், ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்' என்று மத்திய அரசு கட்டாய விதி விதித்துள்ளது.
அதன் அடிப்படையில், 2020, 2021, 2023ம் ஆண்டு களில், 2,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்ய, மின் வாரியம், மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்த தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
தி.மு.க., ஆட்சி அமைந்த பின், எந்த தனியார் நிறுவனங்களுடனும், மின் வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை.
இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநில மின் தேவையை பூர்த்தி செய்யவும், மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகளை அடைவதற்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்டவை. இதில், எவ்வித முறைகேடும், விதிமீறல்களும் இல்லை.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பெறுவது குறித்து, மத்திய அரசின் கட்டாய விதி எதுவும் இல்லாத காலத்தில், அ.தி.மு.க., ஆட்சியில், அதானி நிறுவனம் தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் வாயிலாக, 648 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், 2015 ஜூலை 4ல் கையெழுத்திட்டது.
அதானி நிறுவனத்திடம் இருந்து யூனிட் சூரியசக்தி மின்சாரம், 7.01 ரூபாய்க்கு நீண்ட கால அடிப்படையில் பெற ஒப்பந்தமிட்ட, அ.தி.மு.க., அரசை விட்டு விட்டு, 2021ல் பொறுப்பேற்ற உடனே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், அந்நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்திய தி.மு.க., அரசை குறை சொல்வதா?
அதிலும் அந்த வழக்கில், மின் வாரியத்திற்கு சாதகமாக, அதாவது, 5.10 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையை பெற்ற, தி.மு.க., அரசை குறை கூறவது எந்த வகையிலும் நியாயமாகாது.
பொய்யான தகவல்
தொழிலதிபர் அதானியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தாக கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்ல, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவலை கொண்டு சென்று, மக்களை திசை திருப்பும் முயற்சியாக கருத வேண்டியுள்ளது.
'அவரை சந்தித்தார்; இந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்' என்றெல்லாம் பொய் தகவலை தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.