அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
ADDED : டிச 22, 2024 02:50 AM
புதுடில்லி:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற புகாரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
கீழமை நீதிமன்றங்களில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி. இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
செந்தில் பாலாஜி வழக்கு நிறைவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரை அவரை சிறையிலேயே வைத்திருக்க முடியாது என்று சொல்லி, நீதிபதிகள் அவருக்கு ஜாமின் வழங்கினர்.
அமைச்சராக பொறுப்பேற்பது பற்றி எந்த தடையும் இல்லாததால், உடனடியாக செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மூல மனுதாரர்களில் ஒருவரான ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஏற்கனவே செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முகாந்திரம் எதுவும் இல்லை. இதற்காக, மனுதாரர் வழங்கிய ஆவணங்களை கவனமாக பரிசீலித்த பின்பே, அவருடைய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
'செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால், சாட்சிகள் அச்சத்தில் உள்ளனர். இது வழக்கின் விசாரணையை பாதிக்கக்கூடும். அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறி, வித்யாகுமார் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவின் விசாரணை நிலுவையில் உள்ளது.